கலெக்டர் காலில் விழுந்த விவசாயி - தரையில் உட்கார்ந்து விவசாயியிடம் குறையை கேட்ட திருப்பத்தூர் கலெக்டர்...!

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் திடீரென கலெக்டர் காலில் விழுந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-01 10:35 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் அமர் குஷ்வாஹா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் வேளாண், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 349 மனுக்களை கலெக்டர் அமர் குஷ்வாஹா பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் இருப்பிடத்திற்கே சென்று மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். மேலும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.

அப்போது அங்கு மனுகொடுக்க வந்து காத்திருந்த விவசாயி ஒருவர் திடீரென கலெக்டரின் காலில் விழுந்தார். இதை சற்று எதிர்பார்க்காத கலெக்டர் உடனே தரையில் உட்கார்ந்து கொண்டு, மனுவை பெற்றுக்கொண்டு காலில் விழக்கூடாது எனவும், இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது எனவும், தரையில் 5 நிமிடங்கள் உட்கார்ந்து அவரிடம் விசாரித்தார். அப்போது அங்கு இருந்த அதிகாரிகள் திடீரென கலெக்டர் தரையில் அமர்ந்ததால் என்னசெய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்