சந்தன மலையில் பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்

கூடலூர் அருகே சந்தன மலையில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2023-09-28 22:15 GMT

கூடலூர்

கூடலூர் அருகே சந்தன மலையில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

சந்தன மலை முருகன் கோவில்

கூடலூர் தாலுகா பகுதியில் பெரிய அளவில் சுற்றுலா திட்டங்கள் இல்லை. ஊசிமலை மற்றும் தவளமலை காட்சி முனைகள், நாடுகாணி தாவரவியல் மைய பூங்கா மட்டுமே உள்ளது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகா மக்கள் மட்டுமின்றி, கேரள-கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சியில் சுற்றுலா துறையின் பட்டியலில் உள்ள சந்தன மலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. இங்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இதுதவிர சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அழகிய நீர்வீழ்ச்சிகள், காட்சி முனை பகுதிகள் உள்ளன. பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுற்றுலா திட்டங்கள் எதுவும் இல்லை. இதனால் விவசாயத்தைத் தவிர வேறு வேலைவாய்ப்பு இன்றி, பொதுமக்கள் கூடலூர் அல்லது பிற மாவட்டங்களுக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

பூங்கா அமைக்கும் பணி

எனவே, சந்தன மலையில் சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் சந்தன மலையை அழகுபடுத்தி பூங்கா அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஏற்கனவே தயார் செய்த மலர் பாத்திகளில் மலர் செடிகள், அலங்கார செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. அங்கு அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சந்தன மலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறிய அளவில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. வருகிற நாட்களில் போதிய நிதி ஒதுக்கிய பிறகு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்