இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்பட மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 3 நாள் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர கிளை சார்பில் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை நகர்மன்றம் அருகே இருந்து மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக தலைமை தபால் நிலையம் நோக்கி வந்தனர். அப்போது தட்டு ரிக்ஷா வண்டியில் சிலிண்டரை ஒருவர் தூக்கிபிடித்தப்படி வந்தார். வண்டியை நிர்வாகிகள் தள்ளிக்கொண்டு வந்தனர். தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டப்படி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசாா் கைது செய்தனர். இதில் பெண்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.