வடிகால் வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கொள்ளிடம் அருகே குடியிருப்பு-சாலைகளில் தேங்கிய மழைநீர் வெளியேற வடிகால் வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-11-11 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே குடியிருப்பு-சாலைகளில் தேங்கிய மழைநீர் வெளியேற வடிகால் வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வடிகால்

கொள்ளிடம் அருகே நல்லூர் கிராமத்தில் கொள்ளிடத்தில் இருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் சாலையின் ஓரத்தில் குளம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீர், இந்த குளத்திற்கு வந்து, இங்கிருந்து வெளியேறி செல்லும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த வடிகால் அடைக்கப்பட்டுள்ளதால் கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் வெளியேற வழியின்றி நல்லூரில் உள்ள குடியிருப்புகளையும், நெடுஞ்சாலையையும் தண்ணீர் சூழ்ந்து வருவது வழக்கமாக உள்ளது.

சாலை மறியல்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொள்ளிடம் பகுதியில் கனமழை பெய்து வருவதால் நல்லூர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் நெடுஞ்சாலையில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நெடுஞ்சாலையில் நான்குபுற சாலைகளும் சந்திக்கும் இடத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

மழை நீரை வெளியேற்றும் வகையில் நிரந்தரமாக வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நல்லூர் கிராம மக்கள் கொட்டும் மழையிலும் குடைகளை பிடித்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழியே மகேந்திரப் பள்ளிக்கு சென்ற அரசு பஸ்சையும் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கே மூங்கில் மரங்களை போட்டு வானங்களை தடுத்து நிறுத்தினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்அருண்மொழி, கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சப்-இன்ஸ்பெக்டர் நேச மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து பொக்லின் எந்திரம் மூலம் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றும் பணி நடந்தது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சொந்தமான இடம் வழியே தண்ணீர் வெளியேற்ற அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சாலை மறியலால் நேற்று பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படடது.வடிகால் வாய்க்காலைஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்