தென்காசியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட தொகுப்பு..!

தென்காசி மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

Update: 2022-12-08 08:30 GMT

தென்காசி,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார். இதற்காக நேற்று மாலை சென்னை எழும்பூரில் இருந்து பொதிகை ரெயிலில் புறப்பட்டார். அவருக்காக தனியாக சொகுசு பெட்டி ஒன்று இணைக்கப்பட்டது. இன்று காலை 7.30 மணிக்கு தென்காசி ரெயில் நிலையத்தில் வந்திறங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோர் உடன் வந்தனர்.



 



அங்கு தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மாவட்ட கலெக்டர் ஆகாஷ், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.



 



அதனை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் சிறிது தூரம் நடந்து சென்று அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடம் சால்வை உள்ளிட்டவைகளை பெற்றுக்கொண்டார். மேலும் பொதுமக்களுடன் கைகுலுக்கி கொண்ட பின்னர் வேனில் குற்றாலம் விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டார். அப்போது வழிநெடுகிலும் மயிலாட்டம், ஒயிலாட்டம், தாரை தப்பட்டை, சென்டைமேளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



 





 





 




 






 

பின்னர் விழாவில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து அனைத்து துறைகளின் சார்பில் ரூ.34.14 கோடி மதிப்பில் 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அனைத்து துறை சார்பில் ரூ.22.20 கோடி மதிப்பில் 57 முடிவுற்ற பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.



 









 


தென்காசி நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-


 



தென்காசி மாவட்டத்தில் இதுவரை 73,491 பயனாளிகளுக்கு பயிர் கடன் மற்றும் நகை கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயம் செழிக்க ரூ.13 கோடி மதிப்பீட்டில் 1,823 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 1,701 குடும்பங்களுக்கு வேளாண் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.1.95 லட்சம் செலவில் 50 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொருவருடைய தேவையையும், ஒவ்வொருவரின் பிரச்சினையையும் அறிந்து நமது அரசு செயல்படுகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் விடுபட்ட சில வாக்குறுதிகளை மட்டும் கூறி புலம்பிக் கொண்டிருக்கிறார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கெல்லாம் பதில் அளிக்க விரும்பவில்லை. எங்களை நம்பி வாக்களித்தவர்களுக்கு உண்மையாகவும், உணர்வு பூர்வமாகவும் உள்ளோம்.

தமிழக மக்கள் இருண்ட காலத்தில் இருந்து உதயசூரியன் காலத்திற்கு வந்துவிட்டனர். இந்தியாவில் தமிழகம் முதலிடம் வரவேண்டும் என்பதே எனது லட்சியம், எனது குறிக்கோள். அனைத்து துறைகளிலும் தமிழகம் உயர்ந்து வருகிறது. இதனை மக்கள் மனதில் நான் கண்டுகொண்டிருக்கிறேன். இந்த ஆட்சி தான் தொடர வேண்டும் என்று கூறி மக்கள் என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்