கேளம்பாக்கம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை; தங்கை கொலைக்கு பழிக்கு பழியாக அண்ணன் வெறிச்செயல்

கேளம்பாக்கம் அருகே தங்கை கொலைக்கு காரணமானவரை பழிக்கு பழியாக வெட்டி கொன்ற அண்ணன். அவரது கூட்டாளிகள் 5 பேருடன் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-09-05 15:44 IST

கள்ளத்தொடர்பு

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 38). இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்ததால் சுகன்யா தனது 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இவர் புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு அருகே மின் சாதனங்கள் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வந்தவர் பாலாஜி (26). இவருக்கும் சுகன்யாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகன்யாவின் கணவர் வெங்கடேசனுக்கு தெரியவந்து இருவரையும் கண்டித்தார். மேலும், பாலாஜியின் தந்தை குமாரும் இவர்களை கண்டித்தார். இருப்பினும் இவர்களுக்கு இடையே கள்ளக்காதல் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

எரித்துக்கொலை

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி சுகன்யாவின் கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்த பலத்த தீக்காயங்களுடன் சுகன்யா செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தீ விபத்து குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பாலாஜியின் தந்தை குமார் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி சுகன்யாவை கொலை செய்தது தெரிய வந்தது. போலீசார் குமார் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சாரமாரி வெட்டு

தனது தங்கையை தீ வைத்து கொன்றவரை பழிக்கு பழி வாங்க சுகன்யாவின் அண்ணன் ரவி காத்து கொண்டு இருந்தார். தங்கையை கொன்ற குமாரின் மகன் பாலாஜியை நோட்டமிட்ட ரவி தனது கூட்டாளிகள் 5 பேருடன் நேற்று பாலாஜி தனது கடை அருகே நின்று கொண்டு இருந்தபோது அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் பாலாஜிக்கு தலை, கை, கால், முகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். கொலையை அரங்கேற்றிய ரவி தனது கூட்டாளிகளுடன் காரில் தப்பினார்.

6 பேர் கைது

கொலை குறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய கொலைகாரர்களை தேடி வந்தனர். மேலும் இதுகுறித்து சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொலை குற்றவாளிகள் வண்டலூர் சாலையில் பாண்டிச்சேரி நோக்கி மதுராந்தகம் வழியாக செல்லும்போது தொழுப்பேடு பகுதியில் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். காரில் தப்பி செல்ல முயன்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுகன்யாவின் அண்ணன் ரவி (42) அவரது கூட்டாளிகள் சரவணன் (22), ஆனந்த் (24) அரவிந்த் (24), திருமாவளவன் (25) மற்றும் ஸ்டீபன் ராஜ் (22) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய வீச்சருவாள் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தன் தங்கையை கொலை செய்ததால் பழிக்கு பழி வாங்க சுகன்யாவின் சகோதரர் ரவி கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலாஜியை சரமாரியாக வெட்டி கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்