மகாளய அமாவாசையையொட்டிசேலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசையையொட்டி சேலத்தில் முன்னோர்களுக்கு ஏராளமானவர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

Update: 2023-10-14 20:33 GMT

சேலம்

மகாளய அமாவாசையையொட்டி சேலத்தில் முன்னோர்களுக்கு ஏராளமானவர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

மகாளய அமாவாசை

தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு சென்று புனித நீராடி, பின்னர் பூஜை செய்து வழிபட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ஒவ்வொருவரின் நம்பிக்கை ஆகும்.

அதன்படி நேற்று மகாளய அமாவாசையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளான காவிரி கரையோரங்களில் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். சேலம் சுகவனேசுவரர் கோவில் அருகே உள்ள மண்டபத்துக்கு நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் ஏராளமானவர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

அப்போது வாழை இலையில் தேங்காய், பழம், பூ, மற்றும் காய்கறிகள், வைத்து அர்ச்சகர்கள் மந்திரங்களை கூறினர். தங்கள் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி தர்ப்பணம் கொடுத்தவர்கள் வேண்டிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து எள் சாதத்தை காகங்களுக்கு வைத்து வழிபட்டு புனித நீராடி சித்தேஸ்வர சாமியை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

இதேபோல் கன்னங்குறிச்சி ஏரி, மூக்கனேரி உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் திரண்டு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் அணைமேடு திருமணிமுத்தாறு கரையோரத்திலும் பலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மகாளய அமாவாசையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில் புதிய பஸ் நிலையம், மேட்டூர் மற்றும் தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்