மோகனூர் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள்முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்
தை அமாவாசையையொட்டி மோகனூர் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மோகனூர்
தை அமாவாசை
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாகும். இதனால் அமாவாசை தினத்தில் மோகனூர் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
தை அமாவாசை தினத்தில், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், முன்னோர்களின் ஆசியால் நன்மைகள் ஏற்படும். இந்நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். அதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். மேலும் தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.
முன்னோர்களுக்கு திதி
அதன்படி தை அமாவாசையான நேற்று மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். எள், பச்சரிசி வைத்து வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர். தொடர்ந்து, ஆற்றில் புனித நீராடினர்.
மோகனூர் காவிரி ஆற்றில் நாமக்கல், வளையபட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, ராசிபுரம், மல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலை முதலே முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். திதி கொடுக்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மோகனூர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில், ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.