தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
சென்னை,
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த தேர்வு வருகிற 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் பாடத்துக்கான தேர்வு நடக்க இருக்கிறது. இந்த தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 58 ஆயிரத்து 201 மாணவர்கள், 4 லட்சத்து 13 ஆயிரத்து 998 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பேர் எழுத உள்ளனர். இதுதவிர தனித்தேர்வர்கள் 21 ஆயிரத்து 875 பேரும், சிறைவாசிகள் 125 பேரும் எழுதுகிறார்கள்.
இன்று தமிழ் பாடத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற்கு அடுத்து வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆங்கில பாடத் தேர்வு என ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 4 நாட்கள் இடைவெளிவிட்டு வருகிற 22-ந்தேதி வரை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்வை பொறுத்தவரையில் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் நடத்தப்பட உள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உள்பட மின்சாதனம் கொண்டுவர தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், 43 ஆயிரத்து 200 தேர்வறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்கிடையில், பிளஸ்-1 மாணவ- மாணவிகளுக்கு வருகிற 4-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரையிலும், அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு வருகிற 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரையிலும் பொதுத் தேர்வு தொடங்கி நடக்க இருக்கிறது.