தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 11 ஆம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பின்னர், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். இதைத்தொடர்ந்து இந்த தனித்தீர்மானம் ஏகமனதாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையின் இன்றைய அலுவல்கள் முடிந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற இந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை மூன்று நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 11 ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும். துணை மானிய கோரிக்கை மீது நாளை விவாதம் நடைபெறும். நாளை மறுநாள் துணை மானிய கோரிக்கைக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிப்பார். சட்டமன்றத்தில் ஏதேனும் மசோதா கொண்டு வரப்படும் பட்சத்தில் அவை விவாதிக்கப்பட்டு அன்றே நிறைவேற்றப்படும்" என்றார்.
இதற்கிடையே, சட்டப்பேரவை கூட்டத் தொடரை இரண்டு நாட்கள் மட்டுமே நடத்த அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருப்பதால் குறைந்தபட்சம் வரும் வெள்ளிக்கிழமைவரையாவது கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் சபாநாயகர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் எஸ்.பி வேலுமணி குற்றம் சாட்டினார்.