தொகுதி மறுசீரமைப்பு; இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம் - பினராயி விஜயன்
பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.;

சென்னை,
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு உள்பட மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது.
எனவே, இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும் தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி பல்வேறு மாநில முதல்-மந்திரிகளுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது தொடர்பாக சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக பா.ஜ.க. எப்போதும் இருந்து வருகிறது. மாநில உரிமையை நிலைநாட்டிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், "பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். தொகுதி மறுசீரமைப்பு என்பது எண்ணிக்கை சார்ந்தது மட்டுமல்ல, இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. மத்திய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்துவோம்" என்று தெரிவித்தார்.