காதலிக்கும்படி தகராறு: கல்லூரி மாணவியின் தம்பி கடத்தப்பட்டதால் பரபரப்பு
காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியின் தம்பி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.;

கோவையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவிக்கு தனது தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா (22) என்பவர் அறிமுகம் ஆனார். முதலில் நட்பாக பழகி வந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை தொடர்பு கொண்டு பேசிய சூர்யா, நான் உன்னை காதலிக்கிறேன் என்றும், உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருக்கிறது என்றும் கூறினார். அதற்கு அந்த கல்லூரி மாணவி, எனக்கு காதல் பிடிக்காது என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டு அவருடைய செல்போன் எண்ணை பிளாக் செய்ததாக தெரிகிறது.
இந்த சூழலில் கடந்த 14-ந் தேதி அந்த மாணவி, தனது தோழிக்காக கல்லூரி அருகே காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த சூர்யா, அந்த மாணவியை சந்தித்து தன்னை காலிக்கும்படி தகராறில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இதுதொடர்பாக தனது தம்பியிடம் கூற, அவர் தனது நண்பர்கள் சிலருடன் வந்து சூர்யாவை கண்டித்தார்.
இந்தநிலையில், அந்த மாணவியின் தம்பி, கல்லூரி செல்வதற்காக போத்தனூரில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு தனது நண்பர்களுடன் காரில் வந்த சூர்யா, அவரை கடத்திச்சென்றார். பின்னர் அவர் அந்த மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, நீ என்னைதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும், அப்படி செய்யவில்லை என்றால் உனது தம்பியை கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டினார்.
இதையடுத்து அந்த மாணவி மற்றும் அவரது தம்பியின் நண்பர்கள் செட்டிபாளையத்துக்கு வந்தனர். அங்கு காரில் வந்த சூர்யா, அந்த மாணவிக்கு தொடர்பு கொண்டு, அவரது தம்பியின் நண்பரான தருண் என்பவரை தங்களிடம் ஒப்படைத்துவிட்டு தம்பியை அழைத்துச்செல், இல்லையென்றால் இங்கேயே அவனை கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் பயந்துபோன அந்த மாணவி கத்தி கூச்சலிட்டார். அதை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் சூர்யா, மாணவியின் தம்பியை அங்கேயே விட்டுவிட்டு காரில் தப்பிச்சென்றார். இதுகுறித்து புகாரின்பேரில், போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சூர்யா தனது நண்பர்களான வெள்ளலூரை சேர்ந்த கலையரசன் (19), சிங்காநல்லூரை சேர்ந்த சங்கர் (21), திருமுருகன் (21) ஆகியோருடன் சேர்ந்து மாணவியின் தம்பியை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து கலையரசன், சங்கர், திருமுருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சூர்யாவை வலைவீசி தேடி வருகின்றனர்.