7 மாநில பிரதிநிதிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள பரிசுப் பொருட்கள் என்னென்ன..?
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.;

சென்னை,
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும் என்பதால், தமிழகம் போன்ற மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. எனவே, இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது தலைமையில் கடந்த 5-ந் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 58 கட்சிகள் கலந்து கொண்ட அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 மாநில முதல்-மந்திரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில், எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.
இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு, தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களான
பத்தமடை பாய்,
தோடர்களின் சால்வை,
காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை,
ஊட்டி வர்க்கி,
கன்னியாகுமரி கிராம்பு,
கோவில்பட்டி கடலை மிட்டாய்,
ஈரோடு மஞ்சள்,
கொடைக்கானல் பூண்டு
ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.