மகளிர்க்குத் 'தாயுமானவராகத்' தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்தி திராவிட மாடலில் தமிழ்நாட்டைத் தலைநிமிர்த்தி வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Update: 2023-09-15 14:04 GMT

சென்னை,

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தப் பணியில், 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. இந்த திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். இதில், தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தகுதி வாய்ந்த 1.06 கோடி பெண்களுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிலையில், நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்தி திராவிட மாடலில் தமிழ்நாட்டைத் தலைநிமிர்த்தி வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்தி திராவிட மாடலில் தமிழ்நாட்டைத் தலைநிமிர்த்தி வருகிறோம்! காலை உணவுத் திட்டம் மாணவர்களின் வருகையை உயர்த்தி, கற்றல் திறனை மேம்படுத்துகிறது.

இப்போது கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தால் உழைக்கும் மகளிரின் சிரமத்தைச் சற்று போக்கியிருக்கிறோம். தாயாகக் கருணையையும் - மனைவியாக உறுதுணையையும் - மகளாகப் பேரன்பையும் பொழியும் மகளிர்க்குத் 'தாயுமானவராகத்' தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும்" என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்