மாஞ்சோலை எஸ்டேட்டை தமிழக அரசே ஏற்று நடத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-05-18 11:52 GMT

கோப்புப்படம் 

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை எஸ்டேட்டிற்கான மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடையவிருக்கும் நிலையில், தலைமுறை தலைமுறையாக அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எண்ணற்ற அடக்குமுறை, சுரண்டல்களை எதிர்கொண்டு காலம் காலமாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியிலேயே தங்கியிருந்து பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதால், தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி சொந்த மாநிலத்திலேயே அகதிகளாகும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

கூலி உயர்வு கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊர்வலம் சென்ற தொழிலாளர்கள் மீது இதே தி.மு.க. அரசின் காவல்துறை நடத்திய தடியடியில், தாமிரபரணி ஆற்றில் குதித்து 17 பேர் உயிரிழந்த துயரம் அரங்கேறி கால் நூற்றாண்டுகள் கடந்திருந்தாலும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் துளியளவும் மேம்படவில்லை என்பதை தற்போதைய சூழல் உணர்த்துகிறது.

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களைப் போல மாஞ்சோலை எஸ்டேட்டையும் தமிழக அரசே ஏற்று நடத்தி தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, தேயிலை பறிப்பதை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வேலையுடன், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை அரசே ஏற்று நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்