தமிழ் கையெழுத்து போட்டி

தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் கையெழுத்து போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

Update: 2023-06-20 19:15 GMT

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ் வளர்ச்சித்துறையின் 2022-2023-ம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தமிழ் மொழியை அழகாக எழுதி வருபவர்களை ஊக்குவிக்கவும், அதனடிப்படையில் பிற மாணவ, மாணவிகளுக்கு தமிழில் அழகாக எழுதும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்தி பரிசும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் கையெழுத்து போட்டிகள் தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 6 முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு காலை 10 மணியளவிலும், 10 முதல் பிளஸ்-2 வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு பகல் 2 மணியளவிலும் போட்டி நடக்கிறது. 6 முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகையாக முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.1,000 வழங்கப்படும். 10 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.4 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அனுமதிக் கடிதம் பெற்று இப்போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்