சதுரகிரியில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு
சதுரகிரியில் தை அமாவாசையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர்.
வத்திராயிருப்பு,
சதுரகிரியில் தை அமாவாசையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர்.
தை அமாவாசை
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. தை அமாவாசையன்று அங்கு தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.
அதன்படி நேற்று தை அமாவாசை என்பதால் அதிகாலை முதலே, கடும் பனியையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவார பகுதியில் குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு, பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர்.
அடிவாரத்தில் பலர் முடிக்்காணிக்கை செலுத்திவிட்டு, மலைப்பாதைகளில் உள்ள வழுக்குப்பாறையில் நீராடிவிட்டு கோவிலுக்கு சென்றனர்.
சிறப்பு வழிபாடு
தை அமாவாசையை முன்னிட்டு நேற்று பகல் 11 மணிக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இந்த சிறப்பு வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து தாணிப்பாறைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அடிவாரப்பகுதியில் வத்திராயிருப்பு போலீசார் மற்றும் வனத்துறைகேட் பகுதியில் மதுரை மாவட்டம் சாப்டூர் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.