மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Update: 2023-02-03 10:17 GMT

சென்னை,

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முறையான ஆய்வை உடனடியாக மேற்கொண்டு விவசாயிகளுக்கான உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராகி வரும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளன. ஏற்கனவே, வடகிழக்கு பருவமழையினால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமான நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரும் நிறுத்தப்பட்டது.

எனவே, பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் போதிய நீர் இல்லாததால் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் தேக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. ஆகவே, பாதிக்கப்பட்ட இடங்களில் முறையான ஆய்வை உடனடியாக மேற்கொண்டு விவசாயிகளுக்கான உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்