சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

மயிலம் சுந்தர விநாயகர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-17 18:45 GMT

மயிலம்

மயிலம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்று காலை விநாயகர், பால சித்தர், வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணியர் வழிபாடு, கணபதியாகம், மாலையில் பூமித்தாய் புதல்வன் வழிபாடு, புனித மண் சேகரித்தல், முளைப்பாரி எடுத்தல், காப்பு கட்டுதல், முதல் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்துநேற்று முன் தினம் காலை சுமங்கலி வழிபாடு, 2-வது கால யாக பூஜை, 3-வது கால யாக பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் நேற்று அதிகாலை 5 மணிக்கு யாக வேள்வி தத்துவங்கள், 4-வது கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணியளவில் யாக சாலையில் இருந்து மேளதாள இசையுடன் புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று 6:45 மணி அளவில் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் சுந்தர விநாயகர் கோவில் விமான கலசம், கோவில் கோபுர கலசம் ஆகியவற்றுக்கும், மூலவர் சுந்தர விநாயகருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்