தாய் உயிரிழந்தது தெரியாமல் பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் - படிப்பிற்காக தந்தை செய்த தியாகம்

சங்கரன்கோவில் அருகே தாய் உயிரிழந்தது தெரியாமல் பொதுத்தேர்வு எழுதிய குழந்தைகள்,படிப்பிற்காக தந்தை செய்த தியாகம் மெய்சிலிர்க்க வைத்தது.

Update: 2022-05-24 15:42 GMT

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம்,சங்கரன்கோவில் காந்தி நகர் கீழ 4-வது தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி முத்துமாரி(வயது 40). பெரியசாமி சங்கரன்கோவிலில் உள்ள கேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி நேற்று மாலை கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக சங்கரன்கோவில் எழில் நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் சண்முகச்சாமி (50) என்பவரிடம் சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இறந்த முத்துமாரிக்கு வாணிஸ்ரீ (15) ,கலாராணி (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். நேற்று முத்துமாரி இறந்த நிலையில் இன்று இரண்டு மகள்களுக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இருந்ததினால் முத்துமாரியின் கணவர் பெரியசாமி தன் குழந்தைகளுக்கு அவர்களுடைய தாய் இறந்ததை தெரிவிக்காமல் அடிபட்டு விட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று அந்த குழந்தைகளுக்கு தேர்வு நடந்ததால் அரசு மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டம் செய்வதையும் கொஞ்சம் தாமதமாக பண்ண சொல்லியுள்ளார். இந்நிலையில் முத்துமாரியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று மதியம் 1 மணிக்கு அவர்கள் உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தேர்வு எழுதி முடித்து வந்த முத்துமாரியின் குழந்தைகளை நேரடியாக மயானத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போதுதான் தாய் இறந்து விட்ட தகவலை பெரியசாமி தெரிவித்துள்ளார். மயானத்துக்கு சென்ற 2 குழந்தைகளும் ஏங்கி அழுத சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .மனைவி இறந்தநிலையிலும் மகளின் படிப்பிற்காக தந்தை செய்த தியாகம் அங்கு உள்ளவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்