பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்

பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்

Update: 2022-11-10 20:08 GMT

தஞ்சை பழைய பஸ்நிலையம் முதல் புதிய பஸ் நிலையம் வரையில் பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடியே மாணவ, மாணவிகள் பயணம் செய்து வருகிறார்கள். ஆபத்தான பயணம் அசம்பாவிதத்தில் முடிவடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பஸ்களில் நிரம்பி வழியும் கூட்டம்

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு தமிழ்நாடு அரசு போக்கவரத்துக்கழகம் சார்பில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மருத்துவக்கல்லூரி, வல்லம், திருக்காட்டுப்பள்ளி, நாஞ்சிக்கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதில் குறிப்பாக தஞ்சை பழைய பஸ் நிலையம் முதல் புதிய பஸ் நிலையம் அங்கிருந்து மருத்துவக்கல்லூரி, வல்லம் போன்ற இடங்களுக்கு செல்லும் பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணம்

இந்த நேரங்களில் பஸ்களில் இடம் கிடைக்காமல் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள். இந்த காட்சி ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் என்று நினைத்து விடாதீர்கள். பல மாதங்களாக இந்த நிலையே காணப்படுகிறது. மாணவர்கள் எப்படியாவது தொங்கியபடி பயணம் செய்கிறார்கள். மாணவிகளின் நிலையோ மிகுந்த பரிதாபமாக உள்ளது.பழைய, புதிய பஸ் நிலையங்களுக்கு பஸ்கள் வந்து நின்றவுடன் இடம்பிடிப்பதற்காக மாணவ, மாணவிகள் ஓடிச்சென்று ஏறும் காட்சியை நாம் அன்றாடம் பார்க்க முடிகிறது.

பஸ்களில் தொங்கிக்கொண்டு மாணவர்கள் செல்வதை பார்க்கும் போது ஒவ்வொரு பெற்றோரும் அடையும் வேதனைக்கு அளவே கிடையாது. தங்கள் பிள்ளைகள் பள்ளி, கல்லூரிக்கு சென்று விட்டு பத்திரமாக வீடு வந்து சேர்ந்த பின்னரே அவர்கள் நிம்மதி அடைகிறார்கள்.

போதிய அளவில் பஸ்கள் இல்லை

மாணவர்கள் இவ்வாறு படிக்கட்டுகளில் தொங்கி்கொண்டு செல்வதற்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாததே காரணம் என்று மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறுகிறார்கள்.

ஆனால் வழக்கம்போல இயக்கப்படும் பஸ்கள் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தாலும், மாணவர்கள் கூட்டம் காலை, மாலை நேரங்களில் குறைந்தபாடில்லை.

பெண்களுக்கு இலவச பயணம்

இது தவிர வேலைக்கு செல்பவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்களும் இதே நேரங்களில் பயணிப்பதாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

அதிலும் தற்போது பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் நடைமுறையில் உள்ளதால் பெண்களும் அதிக அளவில் பஸ் பயணத்தை விரும்புகிறார்கள். கிராமப்புறங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், அங்கிருந்து நகர்புறங்களுக்கு வேலைக்கு செல்பவர்களாலும் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது என்பதும் இதற்கு காரணமாக உள்ளதாக தெரிகிறது. .

நடவடிக்கை எடுக்கப்படுமா?

மாணவ, மாணவிகள் இவ்வாறு ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடைபெற்று விடுமோ? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆபத்தான பயணத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்