மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் மாணவ-மாணவிகள்

மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் மாணவ-மாணவிகள்

Update: 2022-07-11 18:42 GMT

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மரத்தடியில் அமர்ந்து மாணவ-மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். போதிய வகுப்பறை கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போதிய வகுப்பறை கட்டிடங்கள்

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 430 மாணவ-மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாத நிலை உள்ளது. இருக்கின்ற ஒரு வகுப்பறை கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டும், ஜன்னல்கள் உடைந்தும் காணப்படுகிறது. இந்த கட்டிடத்தில் தான் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் ஒரே வகுப்பறையில் 5 மற்றும் 6-ம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த அறையில் 110 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

போதிய இடவசதி இல்லாத காரணத்தால் இருக்கைகள் இருந்தும் மாணவ-மாணவிகள் தரையில் அமர்ந்து கல்வி கற்கின்றனர். ஆசிரியர்கள் இடப்பற்றாக்குறையால் நின்று கொண்ேட பாடம் நடத்துகின்றனர்.

மரத்தடியில் அமரும் அவலம்

ஒரு வகுப்பறைக்கு 40 மாணவர்கள் என்ற நிலையில், போதிய வகுப்பறை இல்லாததால் ஒரு வகுப்பறையில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர வைக்கப்பட்டு கல்வி கற்பிக்கப்படுகிறது.

வகுப்பறை பற்றாக்குறை காரணமாக பள்ளி அருகில் மரத்தடி நிழலில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்த வேண்டிய அவலம் இருந்து வருகிறது.

இதில் வெயில், மழை என திறந்த வெளியில் மாணவர்கள் சிரமப்பட்டு கல்வி கற்று வருகின்றனர். நேற்று திருவாரூர் பகுதியில் சாரல் மழை பெய்தது. அப்போது திறந்த வெளியில் அமர்ந்த மாணவ-மாணவிகள் தங்களது புத்தகங்களை தலைமேல் வைத்த குடையாக பயன்படுத்தினர்.

சேதமடைந்த சத்துணவு கட்டிடம்

இந்த பள்ளியில் சத்துணவு கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தில் இட வசதி இல்லாததால் உணவினை கூட மாணவர்கள் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. மேலும் இந்த பள்ளிக்கு அருகில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதமடைந்து இடித்து அப்புறப்படுத்தும் நிலையில் பராமரிப்பின்றி உள்ளது.

எனவே பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு போதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனை நேரில் சந்தித்து அவர்கள் மனு அளித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்