திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்

சிவகங்கையில் நடைபெறும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

Update: 2023-09-13 19:00 GMT


சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறையால் திருக்குறளில் உள்ள கருத்துகளை மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கசெய்யும் வகையில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தது. இப்பரிசுத்தொகை தற்போது ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பெற்று வருகிறது. அதன்படி இப்போட்டியில் பங்கேற்க சிவகங்கை மாவட்ட அளவில் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இதில் பங்கேற்கும் மாணவர்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குனருக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனரால் பரிந்துரைக்கப்படும்.

திருக்குறள் முற்றோதலில் பங்குபெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்