ஓடும் ரெயிலில் மாணவர்கள் அட்டகாசம்..! பிளாட்பாரத்தில் பொறிபறந்த பட்டாக்கத்தி!

பொன்னேரி அருகே மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பிளாட்பாரத்தில் உரசியபடி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2022-10-09 10:20 GMT

பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். அவர்கள் தினந்தோறும் மின்சார ரெயில் மற்றும் பஸ்களில் பயணம் செய்து கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள்.

இவர்களால் ரூட்டு தல தகராறில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது. போலீசார் மாணவர்களுக்கு பல்வேறு எச்சரிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் எடுத்தும் இது குறையவில்லை.

இதற்கிடையே மீஞ்சூர் அருகே மின்சார ரெயிலில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள் பட்டாக்கத்திகளை நடைமேடையில் உரசியபடி செல்வது தற்போது மீண்டும் நடந்து உள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Full View

கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரெயிலில் செல்லும் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கட்டில் கும்பலாக நின்றபடி உள்ளனர். அவர்கள் கத்திவாக்கம், அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு ரெயில் நிலையங்களின் நடைமேடையில் மின்சார ரெயில் வந்ததும் மாணவர்கள் சிலர் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசி செல்கின்றனர்.

இதனை கண்டு ரெயில் இருந்த பயணிகளும், நடைமேடையில் இருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்தடுத்த ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் நுழையும்போது வீடியோ எடுக்கச்சொல்லி மீண்டும் நடைமேடையில் பட்டாக்கத்தியை உரசியபடி அவர்கள் அட்டகாசம் செய்து சென்றனர். இதனை மாணவர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளார்.

இதுகுறித்து மின்சார ரெயில் பயணிகள் கூறும்போது, மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் அட்டகாசம் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. போலீசார் எச்சரித்தும் மாணவர்கள் கண்டு கொள்ளாமல் இதுபோல் நடந்து கொள்கிறார்கள்.

இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மாணவர்கள் கத்தியுடன் மோதும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது. மாணவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து மாணவர்களின் ரகளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்