10-ம் வகுப்பு மாணவி மர்மசாவு
புதுப்பேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அருகே ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் ரசிகா (வயது 15). அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர், பொதுத் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரசிகா தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தூக்கில் இருந்து ரசிகாவின் உடலை கீழே இறக்கினர்.
பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்து ரசிகாவின் உடலை தீ வைத்து எரித்து விட்டனர்.
போலீசில் புகார்
இது பற்றி தகவல் அறிந்த ஒறையூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் ரசிகாவின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ரசிகா சாவு குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் ரசிகா உடல் எரிக்கப்பட்ட இடத்திற்கு சென்று, அங்கு கிடந்த எலும்புகளை சேகரித்து உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோல்வி அச்சம்
இதில் தேர்வு தோல்வி அச்சத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ?என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.