இறந்த முதியவரின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சுடுகாட்டுக்கு சாலை வசதி கேட்டு இறந்த முதியவரின் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-19 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சுடுகாட்டுக்கு சாலை வசதி கேட்டு இறந்த முதியவரின் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை வசதி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டுகோணாம்பட்டி ஊராட்சி நொனங்கனூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சுடுகாடு வசதி இருந்தும், அதற்கு பாதை வசதி இல்லை. இதனால், கிராமத்தை சேர்ந்தவர்கள் இறந்தால் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல சிலர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை வருவாய்த்துறையினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நொனங்கனூரை சேர்ந்த முதியவர் உயிரிழந்தார். அவரின் உடலை நேற்று அடக்கம் செய்ய பொதுமக்கள், உறவினர்கள் சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். அப்போது சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் கருங்கல் போடப்பட்டு வழிப்பாதை அடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் முதியவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முடியவில்லை.

போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுடுகாட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி முதியவரின் உடலை வழியில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் உள்ள கற்களை அப்புறப்படுத்தினர். அப்போது அங்கு வந்த அதேபகுதியை சேர்ந்த நபரை பொதுமக்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து எங்களுக்கு கம்பி வேலி அமைத்து பாதைகளை சீர் செய்து எழுதி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிய நடவடிக்கை

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் முதியவரின் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்