ஊராட்சி தலைவர்கள் தர்ணா போராட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-22 14:45 GMT

பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் 40-க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

அப்போது, ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கான டெண்டர்களில் பேக்கேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும். இந்த திட்ட பணிகளுக்கான டெண்டர்களை அந்தந்த ஊராட்சிகள் அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடத்த வேண்டும்.

பேச்சுவார்த்தை

ஊராட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தர்ணாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர்களிடம் தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு 2 மணி நேரத்துக்கு மேலாக ஊராட்சி தலைவர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்