சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-15 16:32 GMT

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் காவேரி தலைமை தாங்கினார். சங்க மாநில செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட நிர்வாகிகள் ராமன், தேவகி, வளர்மதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், நிர்வாகிகள் புகழேந்தி, ஜெயவேல், சண்முகம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். தமிழக அரசின் நிரந்தர திட்டத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வுக்கேற்ப உணவு மானிய தொகையை குழந்தை ஒன்றுக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் 12 மாத மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளிலேயே பண பலன்களை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சத்துணவு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்