மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடியேறும் போராட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் கரூரான் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன், நிர்வாகிகள் மாரிமுத்து, தமிழ்செல்வி, அண்ணாமலை, இளங்கோவன், சின்னமாது, துளசிமணி, காரல்மார்க்ஸ், சுசீலா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
தமிழ்நாடு வருவாய் ஆணையர் உத்தரவுபடி மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டங்களை மாவட்ட அளவிலும், வருவாய் கோட்ட அளவிலும் நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தால் நடத்தப்படும் முகாம்களிலேயே அனைத்து சான்றிதழ்கள், உதவி கருவிகளை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ஏ.டி.எம். மூலம் எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலையில் அமர்ந்து தர்ணா
மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறும் போது முகவரி மாற்றத்தை எளிதாக செய்து கொடுக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை வழங்கி முழு ஊதியம் அளிக்க வேண்டும். அரசு சலுகைகள், அரசு நலத்திட்டங்கள், வங்கி கடனுதவி வழங்குவதில் மாற்றுதிறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்ற பிற மாற்றுத்திறனாளிகள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
250 பேர் கைது
அவர்களிடம் தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், இன்ஸ்பெக்டர் நவாஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சில நிர்வாகிகள் மட்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகளை சந்தித்து பேசலாம் என தெரிவிக்கப்பட்டது. போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். போராட்டத்தில் பங்கேற்ற ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டதால் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக தர்மபுரியில் நேற்று காலை முதல் மாலை வரை பரபரப்பு ஏற்பட்டது.