குடிநீர் குழாய் பதிக்கும் பணி தடுத்து நிறுத்தம்; பொதுமக்கள் மறியல்

ஆவுடையார்கோவில் அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-08-29 19:17 GMT

குழாய் பதிக்கும் பணி

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா பூவலூர் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக குடிதண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில் ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழுத் தலைவர் உமாதேவி முயற்சியில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் பூவலூர் ஊராட்சியில் கீழக்குடியிருப்பில் நடந்து வருகிறது.

ஊரில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில், கீழக்குடியிருப்பு பகுதிக்கு சுமார் 800 மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய் வாய்க்கால் வழியாக பதிக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது, ஒரு சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு நேற்று காலை குடிநீர் குழாய் பதிக்கும் பொக்லைன் எந்திரத்தை தடுத்து நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கீழக்குடிகுடியிருப்பை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திடீரென ஆவுடையார்கோவில்-பெருமருதூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், நாகுடி ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பெருமருதூர்-ஆவுடையார்கோவில் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்