திண்டுக்கலில் கடந்த ஆண்டு திருடப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள 5 வெண்கல சிலைகள் மீட்பு

திண்டுக்கல் மாவாட்டத்தில் கடந்த ஆண்டு திருடப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள 5 வெண்கல சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

Update: 2022-08-17 05:46 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் உள்ள மலைப்பகுதியில் இந்துமத கடவுள் ஆதிநாதபெருமாள் - ரங்கநாயகி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏற்கனவே இருந்த பழைய கடவுள் சிலைகளை அகற்றிவிட்டு புதிதாக வெண்கலத்தால் ஆன 5 சிலைகள் அமைக்கப்பட்டன.

பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, பார்வதி, சந்திரசேகர் என 5 கவுள்களின் வெண்கல சிலைகள் கோவிலில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.

இதனிடையே, கடந்த ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இந்த கோவிலில் இருந்த பூசாரிகளை கத்தி முனையில் கட்டிப்போடுவிட்டு பிரபாகர் என்ற கொள்ளையன் தலைமையில் 3 பேர் 5 சிலைகளையும் கடத்தி சென்றனர்.

இது தொடர்பாக எந்தவித புகாரும் அளிக்கப்படாத சூழ்நிலையில் இந்த 5 சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளதாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த 5 வெண்கல சிலைகளுக்கும் 12 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை வாங்குவதுபோல் மாறுவேடத்தில் சென்று கடத்தப்பட்ட 5 வெண்கல சிலைகளையும் இன்று அதிரடியாக மீட்டுள்ளனர்.

சிலைகளை விற்பனை செய்ய இடைத்தரகர்களாக செயல்பட்ட இளவரசன், பால்ராஜ், தினேஷ் குமார் என 3 பேர் மற்றும் கொள்ளையில் முக்கிய குற்றவாளியான பிரபாகர் ஆகிய 4 பேரையும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான பிரபாகர் கைது செய்யப்பட்ட நிலையில் கொள்ளையில் தொடர்புடைய குமார், ஈஸ்வரன் ஆகிய 2 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மீட்கப்பட்ட 5 வெண்கல சிலைகளும் தற்போது சென்னை அசோக் நகர் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அதை கோர்ட்டு நடைமுறைகளுக்கு பின் மீண்டும் கோவிலில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்