இணையதள வசதி முறையாக வழங்க நடவடிக்கை

கிராமப்புற பள்ளிகளுக்கு இணையதள வசதி முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

Update: 2022-07-01 20:23 GMT

கிராமப்புற பள்ளிகளுக்கு இணையதள வசதி முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

எம்.பி. ஆய்வு

விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் விருதுநகர் பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்ட பணிகளையும், கிராமப்புற பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளில் உள்ள வசதிகளையும், சத்துணவு மையங்களையும் ஆய்வு செய்தார். கூரைக்குண்டு, பட்டம்புதூர், இனாம்ரெட்டியபட்டி, தம்மநாயக்கன்பட்டி ஆகிய கிராம பகுதிகளில் 100 நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்து பணியாளர்களையும் சந்தித்து பேசினார்.

மருளூத்து கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பில் செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தவுடன் அங்குள்ள சத்துணவு கூடத்தையும் ஆய்வு செய்தார். ஸ்மார்ட் வகுப்புகளில் இணைய தள வசதி முறையாக கிடைக்கவில்லை என்று புகார் கூறப்பட்டது.

பெரும்பாதிப்பு

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது காலையிலேயே 100 நாள் வேலைக்கு வந்துள்ள பணியாளர்களை புகைப்படம் எடுத்து இண்டர்நெட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பணியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும். கிராமப்புற பள்ளியில் உள்ள ஸ்மார்ட் வகுப்புகளுக்கு இணைய தள வசதி வழங்கும் பணியினை மாநிலஅரசிடமோ அல்லது மாவட்ட நிர்வாகத்திடமோ ஒப்படைத்து இணைப்பு வசதி முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாராட்டு

விருதுநகர் மாவட்டம் முன்னேற துடிக்கும் மாவட்டங்களில் மத்திய சிறு, குறு நடுத்தர தொழில் அமைச்சகத்தால் தேசிய அளவில் விருது பெற்றுள்ளது பாராட்டத்தக்கதாகும்.

பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது வட்டாரத்தலைவர்கள் பிச்சைக்கனி, பாலமுருகன், பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சிவகுருநாதன் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து விருதுநகர் நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் தொகுதி மேம்பாட்டுநிதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்