பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கின.

Update: 2022-08-22 18:27 GMT

விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா, குடியரசு தின விழாவினை முன்னிட்டு குன்னம் குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கின. நேற்று 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான எறிபந்து, இறகுப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், ஆக்கி ஆகிய போட்டிகள் நடந்தன.

இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் ஒற்றையர், இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது. போட்டியினை வேப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் ஜெகநாதன், மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திறமைகளை வெளிப்படுத்தினர்

இதில் வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும், அணிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாவூத் அலி, உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மேலும் முதலிடம் பிடித்த மாணவர்களும், அணிகளும் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குன்னம் குறு வட்ட அளவிலான 14, 17, 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான இறகுப்பந்தாட்டம், எறிபந்து, கால்பந்து, கூடைப்பந்து, ஹேண்ட் பால் ஆகிய போட்டிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்