மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வருகிற 20-ந் தேதி கடலூரில் நடக்கிறது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்
கடலூர்
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அம்பேத்கர் பிறந்தநாள்
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது பிறந்தநாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2023-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் மூன்று இடங்களுக்கான பரிசு வழங்கப்படும். மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களில், அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
மாணவர்களை தேர்வு செய்து...
எனவே பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவர்களிடையே முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப்போட்டிகள் நடத்தி, அதன் மூலம் மாணவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாகவும், கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் மூலமாகவும் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, இல்லையெனில் tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் வருகிற 19-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
பள்ளி, கல்லூரிகளுக்கான தலைப்புகள்
இந்த பேச்சுப்போட்டி அம்பேத்கரின் இளமை பருவம், பூனா உடன்படிக்கை, அயல்நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி, பௌத்தத்தை நோக்கி, அம்பேத்கரும் காந்தியடிகளும், வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரின் பங்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், சமூக நீதி என்றால் என்ன, அரசியலமைப்பின் தந்தை, சட்ட மேதை அம்பேத்கர் ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவர்களுக்கும், கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய், பூனா உடன்படிக்கை, புத்தரும் அவரின் தம்மமும், கூட்டாட்சி கோட்பாடும், பாகிஸ்தான் பிரிவினையும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், அம்பேத்கரின் சாதனைகள், அம்பேத்கர் எழுதிய நூல்கள், அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, அம்பேத்கரும் பௌத்தமும் என்ற தலைப்புகளில் கல்லூரி மாணவர்களுக்கும் நடத்தப்படுகிறது.
இதில் பள்ளி மாணவர்களுக்கான போட்டி காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டி பிற்பகல் 2.30 மணிக்கும் தொடங்கும். எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இப்போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.