பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கள்ளக்குறிச்சியில் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பேச்சுப்போட்டி
மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 12-ந் தேதி(புதன்கிழமை) நடைபெற உள்ளது.
இதில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம் ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தியடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை ஆகிய தலைப்புகளிலும் போட்டி நடைபெறுகிறது.
பரிசுகள் விவரம்
பேச்சுப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு் சான்றிதழ் வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரத்திற்கான பரிசுகள் வழங்கப்படும்.
பேச்சுப்போட்டியில் பங்குபெறுவதற்கான விண்ணப்பத்தை 97869 66833 என்ற செல்போன் எண் அல்லது tamildevelopmentvpm@gmail.com என்ற இணைதளம் அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்குபெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.