2-ம் நிலை காவலர் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் 2-ம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பொதுத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வருகிற 25-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

Update: 2023-08-19 18:45 GMT

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் 2-ம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பொதுத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வருகிற 25-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

2-ம் நிலை காவலர் தேர்வு

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 2-ம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு மொத்தம் 3359 காலிப்பணியிடங்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந் தேதி முதல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள படிப்பு வட்டத்தில் நடைபெற உள்ளது.

இணையதளம் மூலம்

இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 28. விண்ணப்பிக்கும் நாள் 18.8.2023 முதல் 17.9.2023 வரை ஆகும். இணையவழி விண்ணப்பம் செய்ய www.tnusrb.tn.gov.in என்ற முகவரியை பயன்படுத்தலாம். எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான வேலை நாடுநர்கள் இத்தேர்விற்கு இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் 04575- 240435 என்ற அலுவலக எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்யலாம்.

இலவச பதிவு

போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்து வருகின்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக தொடங்கப்பட்டுள்ள www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது பெயரினை கட்டணமில்லாமல் இலவசமாக பதிவு செய்து கொண்டு, இந்த இணையதளத்தில் மத்திய, மாநில அரசினால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள், வினா, விடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்