மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு: சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

செப்டம்பர் 26-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அரசுக்கும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-07-24 08:42 GMT

சென்னை,

மூன்றாம் பாலினத்தவர்களான கிரேஸ் பானு மற்றும் ரிஸ்வான் பாரதி ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 615 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 5-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.

அந்த அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பெண்ணாக தேர்வு செய்தவர்களுக்கு மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, அதுபோன்ற எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

அதேபோல உடற்தகுதித் தேர்விலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகை வழங்கப்படாததால், தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சலுகைகளை வழங்கி புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையும், சிறப்பு இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த உத்தரவுகள் அனைத்தும் பரிந்துரைகள் போன்றவை எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 26-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அரசுக்கும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் உத்தரவிட்டனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்