ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசையை முன்னிட்டு கரூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், மஞ்சள், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.மேலும் பக்தர்கள் கோவிலின் முன்பு விளக்கேற்றியும், சூடமேற்றியும் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்இதேபோல கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் உள்ள வராகி அம்மனுக்கு பால், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
நொய்யல்-வேலாயுதம்பாளையம்
புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில், சேமங்கி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.வேலாயுதம்பாளையத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறுவாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல நாணப்பரப்பு மாரியம்மன், தோட்டக்குறிச்சி மலையம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
வெள்ளியணை-தோகைமலை
வெள்ளியணை அருகே பச்சபட்டியில் உள்ள பால ஆஞ்சநேயருக்கு இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இதேபோல் வெள்ளியணை தேவி கருமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தோகைமலை ஒன்றியம் ஆர்.டி.மலை அருகே கரையூரான் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஆர்டிமலை மலை மீது அமைந்துள்ள விராச்சிலை ஈஸ்வரர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.அரவக்குறிச்சி மாரியம்மன் கோவில், செல்லாண்டி அம்மன் கோவில், கருப்பண்ணசாமி கோவில், சிவசக்தி மாரியம்மன் கோவில், நாகம்பள்ளி அணைக்கருப்பணசாமி கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.