மாலையம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

மாலையம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Update: 2023-01-02 18:28 GMT

தோகைமலை அருகே மாலைமேட்டில் பிரசித்தி பெற்ற மாலையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு நவாப் ஆட்சி காலத்தில் அத்திமரத்தில் செய்த சாமி சிலையை வைத்து ராஜகம்பளத்துநாயக்கர் இனமக்கள் வழிபட்டு வந்தனர். இதையடுத்து ஆண்டுதோறும் தை மாத திருவிழாவில், எருதுமாடு மாலை தாண்டு விழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்நிலையில் கடந்த 1995-ம் ஆண்டு கடைசியாக 3 மந்தையை சேர்ந்த நாயக்கர்கள் சேர்ந்து திருவிழா நடத்தி உள்ளனர். பின்னர் அதே ஆண்டு கோவில் சிலை திருட்டு போனதால், கடந்த 28 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.

இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூட்டம் கூடி திருவிழா நடத்த வேண்டும் முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் ஒன்று சேர்ந்து மாலையம்மன் சாமி சிலை செய்து திருவிழா நடத்துவது குறித்து பேசப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் திடீரென கடந்த 1995-ம் ஆண்டு திருட்டுபோன அத்திமரத்திலான மாலையம்மன் சிலையை மர்மநபர்கள் யாரோ கோவில் அருகே வீசி விட்டு சென்றனர். இதையடுத்து சாமி சிைலயை மீண்டும் கோவிலில் வைக்க தோகைமலை போலீஸ் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அனுமதியுடன் நேற்று 7 மந்தை நாயக்கர், பொதுமக்கள் முன்னிலையில் சாமி சிலை மீண்டும் கோவிலில் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து வருகிற 18-ந்தேதி கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்