கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-02 18:45 GMT

ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம்

மழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், பயிர் காப்பீடு செய்துள்ள 1 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், வங்கிகளில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் காப்பீடு தொடர்பான பதிவு விவரங்களை மாற்றி பதிவு செய்ததால் கடந்த 5 ஆண்டுகளாக இழப்பீடு வராமல் உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமிநடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் மயில்வாகனன், மாவட்ட துணை செயலாளர் ராமலட்சுமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

முற்றுகை

விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், செந்தில்குமார், நவநீத கிருஷ்ணன், ராசு, ஜெயராஜ் குருசாமி, முருகேசன் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கணேசன், முருகன், கடலாடி கிழக்கு போஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் ஒன்றாக திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை கண்டித்து அந்த பகுதியில் சாலையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதன்பின்னர் விவசாய சங்க பொது செயலாளர் சாமி நடராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மயில்வாகனன், முத்துராமு, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாவட்ட வருவாய் அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்