'ஷாக்' அடிக்கும் புதிய மின் கட்டணம்

புதிய மின் கட்டணம் ‘ஷாக்’ அடிப்பதாகவும் மாதந்தோறும் வசூலிக்கவும் பொதுமக்களின் குரல் எழுப்புகிறாா்கள்.

Update: 2022-10-31 18:45 GMT

தமிழ்நாட்டில் கடந்த மாதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது.

400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 என்ற வீதத்திலும், 1,000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்ற வீதத்திலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது.

அதன்படி 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.55 வரையும், 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.1,130 வரையும் கட்டணம் உயர்ந்து இருக்கிறது.

தத்தளிக்கிறது

மின்சார வாரியம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 226 கோடிக்கு கடனில் தத்தளிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டியது கட்டாயமாகிவிட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இருந்தாலும் மின்கட்டண உயர்வு 'ஷாக்' தருவதாக உணர்ந்து இருக்கும் பொதுமக்கள், கட்டணம் வசூலிக்கும் முறையையாவது மாற்றி அமைக்கக்கூடாதா? என்ற மனநிலைக்கு வந்து இருக்கிறார்கள்.

புதிய மின் இணைப்புகள், மும்முனை மின் இணைப்பு, வணிக பயன்பாட்டிற்கான இணைப்பு என அனைத்து கட்டணமும் உயர்த்தப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஏழை, எளிய மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தற்போதைய கட்டணம்

தமிழ்நாட்டில் தற்போது மின்சார கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டணம் கிடையாது.

200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வுக்கு பிறகு ரூ.225 வசூலிக்கப்படுகிறது.

400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.1,125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மாதந்தோறும் கண்கிட்டால்...

2 மாதங்களுக்கு ஒரு தடவை கணக்கிடும் இந்த முறைக்கு பதிலாக மாதம் ஒரு தடவை கணக்கிடும் முறையை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது.

ஏன் என்றால்? உதாரணமாக ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மாதத்திற்கு 100 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்?

தற்போது அவர் ரூ.225 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கிறது. மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் கட்டணம் செலுத்த தேவை இருக்காது.

ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துகிறார் என்றால் அவருக்கு மாதத்திற்கு 200 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்.

தற்போது 400 யூனிட்டுக்கு அவர் ரூ.1,125 செலுத்த வேண்டும். மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் ரூ.225 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும்.

இதனால்தான் மாதந்தோறும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.

இதுபற்றியும், மின்சார கட்டண உயர்வு பற்றியும் பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்து வருமாறு:-

பெரும் சுமை

விழுப்புரம் பெரும்பாக்கத்தை சேர்ந்த ஆனந்தி:-

மின் கட்டண உயர்வு என்பது ஒட்டுமொத்த ஏழை, எளிய தாய்மார்களின் தலையில் இடி விழுந்தாற்போல் உள்ளது. ஏற்கனவே வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இவற்றினால் மக்கள், பல்வேறு துயரங்களை சந்தித்து வருகிற நிலையில் தற்போது புதிய மின் கட்டண உயர்வு என்பது மேலும் பெரும் சுமையாக உள்ளது. மக்களிடம் கருத்துக்களை கேட்டுத்தான் இந்த கட்டண உயர்வை அமல்படுத்துவதாக அரசு கூறுகிறது, யார், யாரிடமெல்லாம் கருத்துக்களை கேட்டார்கள், முக்கியமாக ஏழை தாய்மார்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதா? என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அளித்தால் மட்டும் போதாது. 5 ரூபாய் செலவு செய்து பஸ்களில் பயணம் செய்வதால் எந்த சுமையும் ஏற்படப்போவதில்லை. சமையலுக்கு அம்மி, ஆட்டுக்கல் உரலை பயன்படுத்திய காலம் என்றைக்கோ மாறி எலக்ட்ரானிக் சாதனங்களையே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் இந்த புதிய மின் கட்டண உயர்வினால் வீடுகளில் அத்தியாவசிய தேவைக்காக எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவது என்பது யோசிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. பெண்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை செலுத்துவதாக இருந்தால் அரசு, உடனடியாக இந்த மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.

திரும்ப பெற வேண்டும்

காணையை சேர்ந்த இளவரசி:-

முன்பெல்லாம் இட்லிக்கு மாவு அரைக்க வெளியில் உள்ள அரவை மில்லை தேடிச்சென்று அரைத்தோம். அதன் பிறகு வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கியதால் வெளியில் செல்லாமல் வீட்டில் உள்ள கிரைண்டரிலேயே அரைப்போம். தற்போது புதிய மின் கட்டண உயர்வால் அடிக்கடி இட்லி போடுவதையே யோசிக்க வேண்டியதாக உள்ளது. அதுபோல் இட்லி, தோசைக்கு சட்னி அரைப்பதையும் பெரும்பாலும் தவிர்த்துவிட்டு ஒரே வேளையாக சாம்பார் வைக்கும்போது கூடுதலாக தயார் செய்கிறோம். முன்பு 2 மாதத்துக்கு வெறும் ரூ.300 முதல் ரூ.350 வரைதான் மின் கட்டணம் வந்தது. தற்போது அதே யூனிட் பயன்படுத்தினாலும் இருமடங்காக ரூ.700 வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. சில கிராமங்களில் யூனிட் அளவையும் சரிவர குறிப்பதில்லை. அவர்களாவே இஷ்டத்திற்கு கணக்கிடுகிறார்கள். மாதந்தோறும் வீடு, வீடாக மின் ஊழியர்கள் நேரில் வந்து மின் கணக்கீட்டு அளவை குறிக்க வேண்டும். ஏற்கனவே விலைவாசி உயர்வால் அல்லல்பட்டு வருகிற நேரத்தில் மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற்றால்தான் எங்களைப்போன்ற ஏழை குடும்பத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த...

திண்டிவனம் கலைச்செல்வி:-

கடந்த மாதங்களில் வீட்டில் ஏ.சி. பயன்படுத்தினோம். அப்போது மின்கட்டணம் ரூ.2 ஆயிரம் வந்தது. இந்த நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால், தற்போது நாங்கள் ஏ.சி.யை பயன்படுத்தவில்லை. இருப்பினும் ரூ.1700 வந்துள்ளது. ஏ.சி.பயன்படுத்தி இருந்தால் ரூ.2500-க்கு மேல் வந்து இருக்கும். கியாஸ், பெட்ரோல் உள்ளிட்டவை உயர்ந்துள்ள நிலையில் தற்போது மின்கட்டண உயர்வால் மேலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அரசு பொதுமக்களை பாதிக்காத வகையில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். மேலும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் வகையில் திட்டம் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

கூடுதல் பணம் வசூல்

திருவெண்ணெய்நல்லூர் வக்கீல் கரிகாலன்:-

மின் கட்டண உயர்வுக்கு முன்பு ஓரளவு பொதுமக்கள் சமாளிக்க கூடிய வகையில் இருந்தது. மின் கட்ட உயர்வுக்கு பின் தற்போது கட்டணம் அதிகமாகி விட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் போது பில் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. நேரடியாக அலுவலகத்தில் சென்று கட்டும்போது கூடுதல் பணம் வசூலிக்கின்றனர். மின் கட்டணத்தை குறைப்பதோடு, பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மின்கட்டண கணக்கு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

இரு மடங்காக உயர்வு

செஞ்சி பொன்பத்தியை சேர்ந்த நரேன்காந்தி:-

கடந்த முறை மின்கட்டணம் எங்களுக்கு ரூ.2200 வந்தது. தற்போது மின்கட்டண உயர்வால் ரூ.4600 வந்துள்ளது. இதன் மூலம் மின் கட்டணம் இருமடங்கு அதிகரித்துள்ளதால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். ஏற்கனவே கியாஸ், பெட்ரோல் உயர்ந்து வரும் நிலையில் மின்கட்டணமும் உயர்ந்து இருப்பது எங்களுக்கு மிகவும் வேதனை அடைய செய்துள்ளது. எனவே இதில் முதல்-அமைச்சர் தலையிட்டு மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மின்சார மானியம் வழங்க வேண்டும்.

மாவு அரைக்க கட்டணம் உயர்வு

தியாகதுருகம் மில் உரிமையாளர் ஜெயக்குமார்:-

கடந்த 2 மாதத்துக்கு முன்பு கட்டியதை விட கூடுதல் மின் கட்டணம் வந்துள்ளது. இந்த கட்டணத்தால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஏனெனில் எங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை மின்சாரத்துக்கு கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரவை மில்லுக்கு தேவையான உதிரி பாகங்களின் விலை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் எங்களிடம் கோதுமை, மிளகாய், அரிசி, கம்பு உள்ளிட்ட பொருட்களை அரைப்பதற்கான விலையை உயர்த்தி உள்ளோம். இந்த கூடுதல் கட்டணத்தை செலுத்த பொதுமக்கள் வருத்தம் அடைகின்றனர். எனவே மின் கட்டண உயர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய மின் கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தாங்கிக்கொள்ள முடியவில்லை

மூங்கில்துறைப்பட்டு மாரிமுத்து:-

மின் கட்டணம் உயர்வு முன்பு 100 முதல் 150 ரூபாய் வரை மின்கட்டணம் செலுத்தி வந்தோம். ஆனால் தற்போது 2 மடங்கு அதிகரித்து ரூ.450 வரை மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். கூலி வேலை செய்யும் எங்களால் இந்த கட்டண உயர்வை தாங்கிக்கொள்ள முடியவில்லை. பெரும் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்