மக்கள் நீதிமன்றம் மூலம் 13,500 வழக்குகளுக்கு தீர்வு

குமரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில்13,500 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

Update: 2022-06-26 16:06 GMT

நாகர்கோவில்:

குமரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில்13,500 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மக்கள் நீதிமன்றம்

கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 5 கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் குடும்ப நலவழக்கு, வாகன விபத்து இழப்பீடு, சொத்து பிரச்சினை, காசோலை மோசடி உள்ளிட்ட வழக்குகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 14 ஆயிரத்து 325 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், சட்டப்பணிகள் குழு செயலாளர் நம்பிராஜன், வன கோர்ட்டு நீதிபதி சிவசக்தி மற்றும் சார்பு நீதிபதிகள், வக்கீல்கள், வழக்கு தொடர்ந்தவர்கள், எதிர் மனுதார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பத்மநாபபுரம்

பத்மநாபபுரம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் தலைமை தாங்கினார். உரிமையியல் நீதிபதி மருதுபாண்டி, குற்றவியல் நீதிபதிகள் பிரவீன் ஜீவா, மணிமேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மொத்தம் 359 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இவ்வாறு மாவட்டம் முழுவதும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் பேச்சுவார்த்தை மூலம் மொத்தம் 13 ஆயிரத்து 500 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் ரூ.9 கோடியே 24 லட்சத்து 76 ஆயிரத்து 774 வசூலிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்