மக்கள் நீதிமன்றம் மூலம் 1,329 வழக்குகளுக்கு தீர்வு

தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,329 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு ரூ.12 கோடியே 41 லட்சம் பெற்றுத் தரப்பட்டது.

Update: 2022-06-26 19:35 GMT
தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு காண்பதற்காக இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மதுசூதனன் தொடங்கி வைத்தார்.

மோட்டார் வாகன விபத்து

பின்னர், மகளிர் நீதிமன்ற நீதிபதி மணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கீதா, வக்கீல் சார்லஸ் ஜோசப்ராஜ் ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 56 லட்சத்து 68 ஆயிரத்து 93 அளவுக்கு தீர்வு காணப்பட்டது. 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுசீலா, வக்கீல் வித்யா ஆகியோர் கொண்ட 2-வது அமர்வில் குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன், விபத்து தீர்ப்பாய சிறப்பு சார்பு நீதிபதி தங்கமணி, வக்கீல் முல்லை ஆகியோர் கொண்ட 3-வதுஅமர்வில் உரிமையியல் வழக்குகள் மற்றும் காசோலை வழக்குகளுக்கு ரூ.30 லட்சத்து 55 ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. முன் வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கில் ரூ.4 கோடியே 81 லட்சத்து 16 ஆயிரத்து 370 அளவுக்கு தீர்வு காணப்பட்டது.

1,329 வழக்குகளுக்கு தீர்வு

இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகளில் நடத்தப்பட்ட விசாரணை மூலம், மாவட்டத்தில் மொத்தம் 1,329 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.12 கோடியே 41 லட்சத்து 26 ஆயிரத்து 366 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்று தரப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான (பொறுப்பு) முருகன், தஞ்சை வக்கீல்கள் சங்க தலைவர் அமர்சிங் மற்றும் வக்கீல்கள், பொதுமக்கள், வழக்காடிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





Tags:    

மேலும் செய்திகள்