தமிழக அணி வீரர்கள் தேர்வு திருச்சியில் தொடக்கம்
தமிழக அணி வீரர்கள் தேர்வு திருச்சியில் தொடங்கியது.
மாநிலங்களுக்கு இடையிலான 16 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடக்கிறது. இதில் தமிழக அணி சார்பில் கலந்து கொள்ளும் வீரர்கள் தேர்வு திருச்சியில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடக்கும் இந்த தேர்வில் முன்னாள் வீரர்கள் சந்திமவுலி, வாசு தேவதாஸ், தேவ் ஆனந்த், சுதீஷ், கோபிநாத் மற்றும் சிவக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் வீரர்களை தேர்வு செய்கின்றனர். அதன்படி சென்னை பகுதியை சேர்ந்த 16 வீரர்கள் ஒரு அணியாகவும், சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இருந்து, மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட திறமையான 16 வீரர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த மாவட்ட அணி மற்றொரு அணியாகவும் பிரித்து போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது.
தினமும் 90 ஓவர்கள் பந்து வீசப்படும். இந்த போட்டி தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அம்ரிஷ் 66 ரன்களும், பென்னிகின் 46 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர். ஒருங்கிணைந்த மாவட்ட அணி சார்பில் ஜெய்சூர்யா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி உள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது நாள் போட்டி நடக்கிறது. போட்டியின் முடிவில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.