எஸ்.புதூர் அருகே விபத்தில் மாணவிகள் காயம்: ஆம்புலன்ஸ் வர தாமதம்; பொதுமக்கள் மறியல்

எஸ்.புதூர் அருகே விபத்தில் மாணவிகள் காயம் அடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-24 19:00 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே விபத்தில் மாணவிகள் காயம் அடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம்

எஸ்.புதூர் ஒன்றியம், சுல்லாம்பட்டியில் இருந்து பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் 4 மாணவிகளை எஸ்.புதூர் பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார். பள்ளிக்கு வரும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்த மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு எஸ்.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்களை மேல்சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

மேலும் காயமடைந்த மாணவிகளை தனியார் வாகனம் மூலம் மேல்சிகிச்சைக்காக பொன்னமராவதி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த ஒன்றியத்தில் 108 ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில் தற்போது தனியார் ஆம்புலன்ஸ் ஒதுக்கப்பட்டு அது புழுதிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளது.

அதேபோல் எஸ்.புதூருக்கு தனி ஆம்புலன்ஸ் வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்