361 பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு
திருப்பூரில் 361 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 35 வாகனங்களில் உள்ள குறைகளை கண்டறிந்தனர். அவற்றை மறு ஆய்வுக்கு கொண்டு வர உத்தரவிட்டனர்.
திருப்பூரில் 361 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 35 வாகனங்களில் உள்ள குறைகளை கண்டறிந்தனர். அவற்றை மறு ஆய்வுக்கு கொண்டு வர உத்தரவிட்டனர்.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து துறையின் கீழ் உள்ள பள்ளி வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்பட்டு தகுதி சான்று வழங்கப்படுகிறது. அதன்படி திருப்பூர் வட்டார போக்குவரத்து மற்றும் அவினாசி போக்குவரத்து துறைக்கு கீழ் மொத்தம் 10 பள்ளிகளில் 590 பள்ளி வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களுக்கான தகுதி ஆய்வு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கலெக்டர் வினீத் இந்த ஆய்வு பணிகளை பார்வையிட்டார். பள்ளி வாகனங்களில் படிக்கட்டுகளின் உயரம், அதன் நிலை, டிரைவர் அமரும் பகுதி, வாகனத்தின் உள்ளே நடைமேடை பகுதி, தீயணைப்பு கருவி, முதலுதவி கருவி, மாணவர்கள் அமரும் இருக்கை வசதி, வாகனத்தின் முன்னால், பின்னால் பள்ளியின் பெயர், தொடர்பு எண், இ-மெயில் முகவரி எழுதப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
கண்காணிப்பு கேமரா
மேலும் ஜன்னல் கரையோர கம்பிகள், அவசரகால வழி, வேககட்டுப்பாட்டு கருவி, விளக்குகள், ஒலிப்பான், வாகனத்தின் முன்புறம், உள்புறம் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாகனத்தின் பின்புறம் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதையும் கண்காணித்தனர்.
ஆய்வுப்பணியில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தங்கராஜ், பாஸ்கர், முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) பக்தவச்சலம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். தீயணைப்பு துறையினர் தீத்தடுப்பு முறை குறித்து டிரைவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். 108 ஆம்புலன்சு ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து விளக்கினார்கள்.
35 வாகனங்களில் குறை
ஆய்வுக்கு 361 பள்ளி வாகனங்கள் வந்திருந்தன. இதில் 5 வாகனங்கள் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல தகுதியில்லாமல் காணப்பட்டன. வாகனத்தின் மேல் கட்டமைப்பு மிகவும் பழுதடைந்து அபாய நிலையில் இருந்தது. அவற்றை முற்றிலும் மாற்றி வருகிற 27-ந் தேதி மறு ஆய்வுக்கு கொண்டு வர அதிகாரிகள் உத்தரவிட்டனர். 30 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டது.
அந்த வாகனங்களில் உள்ள குறைகளை நீக்கி மறு ஆய்வுக்கு கொண்டு வர தெரிவித்தனர். நேற்று ஆய்வுக்கு வராத மற்ற பள்ளி வாகனங்கள் 27-ந்தேதி கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டது.