சம்பா, தாளடி அறுவடை பணிகள் பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் சம்பா, தாளடி அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் சம்பா, தாளடி அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததால் மயிலாடுதுறை உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களில் மிதமான மற்றும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணியளவில் கன மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.
சம்பா, தாளடி சாகுபடி
கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் சம்பா, தாளடி நெல் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. இந்த மழையால் சம்பா, தாளடி அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அறுவடை பாதிப்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:- தற்போது திடீரென கன மழை பெய்து வருவதால் அறுவடை பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் மழையால் நெல்மணிகள் முளைத்து விடும். மழையால் பயிர்கள் சாய்ந்ததால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் உரங்களை தெளித்து காப்பாற்றினோம். இந்த மழையால் முற்றிலும் அறுவடைப்பணிகள் பாதிப்படையும் என்றனர்.