சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில்முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள்500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. .இதில், பள்ளி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Update: 2023-02-21 20:46 GMT

சேலம்,

விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் சேலம் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. கடந்த 15-ந் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கைப்பந்து, சிலம்பம், ஆக்கி, கபடி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கைப்பந்து போட்டி

இதனிடையே, பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி நடந்தது. இதில், சேலம் மாவட்ட கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்து வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜாராம், அகிலாதேவி, கைப்பந்து பயிற்சியாளர் பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

வருகிற 28-ந் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.




Tags:    

மேலும் செய்திகள்