ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை; நேபாள வாலிபர்கள் உள்பட 5 பேர் கைது

மணலியில் வாலிபர்களுக்கு ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த நேபாள வாலிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

Update: 2023-05-31 21:48 GMT

மணலி,

மணலியில் போதைக்காக பயன்படுத்தும் வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி வாலிபர்களுக்கு விற்பனை செய்து வருவதாக மணலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மணலி போலீஸ் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன், சித்ரா மற்றும் போலீசார் மணலி பஸ் நிலையம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

போதை தரும் மாத்திரைகள்

சந்தேகத்தின் பேரில் அவர் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டியை சோதனை செய்ததில், அதிகமாக பயன்படுத்தினால் போதை தரக்கூடிய வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போதை மாத்திரைகள் ஆர்டர் செய்த மணலி பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்க்கும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிராஜ் லிம்பு (வயது 30), சூசைல் தாபா (20) ஆகிய இருவரையும் மாத்திரை வாங்குவது போல் நடித்து செல்போன் மூலம் பேசி வரவழைத்து கையும் களவுமாக போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர், போலீஸ் நிலையத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்த போது, போதைதரும் வலி நிவாரண மாத்திரைகளை நேபாளத்தைச் சேர்ந்த சென்னை நந்தனம் சி.ஐ.டி. பகுதியில் வசிக்கும் கென்ற ராய் (30), சேத்துப்பட்டில் வசிக்கும் பசந்த் (20) ஆகியோரிடம் ஆன்லைன் மூலம் வாங்குவதாக தெரிவித்தனர்.

5 பேர் கைது

இதனையடுத்து மணலி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரணை செய்த போது, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், போதை மாத்திரைகளை சப்ளை செய்த வியாசர்பாடியை சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் சுப்புராயன் (50) உட்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,500 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்