ஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் புடவைகள்-4 பவுன் நகைகள் திருட்டு

ஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் புடவைகள்-4 பவுன் நகைகள் திருட்டுபோனது.

Update: 2022-08-01 20:13 GMT

ஆண்டிமடம்:

ஜவுளி வியாபாரி

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 70). இவர் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தர்மலிங்கமும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு, சென்னையில் உள்ள தனது மகன்களை பார்ப்பதற்காக கடந்த மாதம் 30-ந் தேதி சென்றனர்.

நேற்று காலை சென்னையில் இருந்து தர்மலிங்கம் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன் பகுதியில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்துள்ள கதவின் பூட்டும் கடப்பாரையால் நெம்பி உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

புடவைகள்-நகைகள் திருட்டு

இது குறித்து உடனடியாக ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 400 காட்டன் புடவைகள் மற்றும் மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

திருட்டுபோன புடவைகளின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு அரியலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர் துர்காதேவி, வீட்டின் கதவு, பீரோக்களில் பதிவான மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்தார்.

வலைவீச்சு

அங்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் டிக்சி வீட்டை சுற்றிலும் மோப்பம் பிடித்தவாறு ஓடிச்சென்று, வீட்டிற்கு அருகிலேயே படுத்துக்கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்